Sunday, July 15, 2012

39. சட்..டென நனைந்தது நெஞ்சம் !! சர்க்கரையானது கண்ணீர் !!

மிகப் பெரீய்ய யாகம் முடித்து அமர்ந்திருந்தார் மன்னர்.  இறையருளால் எல்லாப் பகையையும் வென்று சாம்ராஜ்யத்தையே விரிவுபடுத்தி இனி இந்த உலகில் சாதிக்க வேண்டியதில்லை என்ற எந்தத் தேவையையும் இல்லாத பரிபூரண அமைதி மன்னனிடம். இருக்கும் மனநிறைவைத் தக்க வைக்கும் எண்ணத்தில் அமைந்தது தான் மன்னனின் யாகம்.

மிகப்பெரிய்ய யாகசாலை.. ஆயிரக்கணக்கில் யாக குண்டங்கள்.. நாட்கணக்கில் நடந்த வேத கோஷங்கள்.. இது வரை கேள்விப்பட்டிராத வரையில் நடந்த தான தர்மங்கள்.. ஏழைகள் அனைவருக்கும் மன்னன் அள்ளித்தந்ததில் மிக்க மகிழ்ச்சி... மன்னனைப் புகழாத நபரில்லை.. இதைவிட வேறு யாரும் பெரீய்ய அளவில் யாகமும் தானங்களும் தர்மங்களும் செய்துவிடமுடியாதென்ற இறுமாப்பு மன்னனிடம்..

மிகமாந்த களிப்புடனும், பெருமிதத்துடனும் ஒரு வகையான கர்வத்துடனும் யாகம் முடிந்த யாக சாலையை வலம் வருகிறான் மன்னன் !!

என்ன விதமான மனநிலை இருந்திருக்கும் மன்னனிடம் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்!!

வலம் வரும் மன்னன் யாகசாலையின் ஓரத்தில் ஒரு அதிசயமான விலங்கைப் பார்க்கிறான்.
கொஞ்சம் பெரிய்ய அணில் போலவும் மரநாய் போலவும் ஒரு மிருகம்.. மிக அடர்த்தியான முடிகளுடன் நீண்ட வால்.. அதன் உடலின் கீழ்ப்பாகம் சரியாக பாதியிலிருந்து உடலும் வாலும் தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது... உடலின் மேற்பாகம் சாதாரணமாகவும் அரைக்குக் கீழே தங்கமாகவும் மின்னிய உடலுடன் யாகசாலையின் தர்மம் கொடுக்கும் இடத்தில் சிந்தியிருந்த நீரில் புரண்டு கொண்டிருந்தது...

என்னதான் செய்கிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறான் மன்னன்... ஒரு விதமான ஆச்ச்ர்யத்துடன் அந்த மிருகத்தின் அருகில் செல்கிறான்..


“மன்னா நலமா?”

உயர்ந்த புருவத்துடன் தன்னிடம் பேசும் மிருகத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறான்...

”நலமே.. தாங்கள் எப்படியிருக்கிறீர்கள்? .. யாகம் முடிந்து விட்டது.. உங்களுக்கு என்ன தேவை..?”  - ஆச்சர்யம் விலகாத பார்வையுடன் மன்னன்..

“என் உடலின் தங்க நிறத்தையும், என் பேசும் சக்தியையும் வியந்து கொண்டிருக்கிறீர்கள், தானே !!”

“ஆம்”

“அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளும்...ஒரு ஊரில் ஒரு மிக ஏழ்மையான வேதியர் குடும்பமிருந்தது.. கணவன், மனைவி, அழகான் ஒரு பாலகன் மகன் என சிறிய குடும்பம்..

மிக ஏழ்மை.. சாப்பிட்டே சில வேளைகள் ஆகியிருந்தது...

வேதியர் வெளியில் சென்று வேலைகள் செய்து சம்பாதித்து கொஞ்சம் சத்து மாவு வாங்கி வந்திருந்தார்..

மாவைப் பதமாக்கி.. தம் மூவருக்கும் ஆளுக்கொரு உருண்டை வீதம் மூன்று உருண்டைகள் செய்து.. அன்றையப் பிரார்த்தனைகள் முடித்து சாப்பிட உட்கார்ந்திருந்தது.. வேதியர் குடும்பம்...

“அம்மா.. தாயே.. பசிக்கிறதே..” என்ற குரல் வீட்டின் வெளியில்..

வெளியில் சென்று பார்க்கிறாள் வேதியர் மனைவி.. தம்மினும் ஏழ்மையான ஒரு யாசகர் வீட்டு வெளியில் நிற்கிறார்...

“ஐயா.. உள்ளே வாருங்கள்... நான் இப்பொழுதான் எங்களுக்கு சத்துமாவு உருண்டை செய்தேன்.. இந்தாருங்கள் ” என்று தன் பங்கு உருண்டையை யாசகரிடம் தருகிறாள்..

குடும்பமே சாப்பிடுபவரின் முகத்தில் திருப்தி தெரிகிறதா என்று பார்க்கிறார்கள்..

வந்தவருக்கு இன்னும் பசியாறவில்லை..

வேதியர் தன் பங்கு உருண்டையையும் தருகிறார்... பின்னர் அவர்கள் மகன் தன் பங்கு உருண்டையையும் தந்த பின்பே.. வந்தவர் பசியாறுகிறார்...

வந்தவர் சென்ற பின்னர்.. குடும்பத்திலிருந்த மூவரும் பசியால் இறந்து விடுகின்றனர்..

அப்பொழுது நான் அங்கு சென்றிருந்தேன்.. அங்கே சிதறியிருந்த சத்து மாவுத் துகள்கள் என் மேனியில் பட்ட பொழுது என் மேனி தங்கமாக மாறத்துவங்கியது... எனக்குப் பேசும் சக்தியும் வந்தது..

அப்படியும் பாதி உடல் தங்கமாகும் அளவுக்குத்தான் அங்கு மாவு இருந்தது.. அதற்குப் பின் ஒவ்வொரு முறையும் யாகங்கள் நடக்குமிடங்களுக்குச் சென்று அங்கு சிதறியிருக்கும் நீரில் நான் புரண்டு பார்ப்பேன்.. இன்றளவில் என் மறு பாதியுடல் தங்கமாக மாறுமளவுக்கு எந்த பெரிய தர்மமும் நடக்கவில்லை..

மன்னா.. நீங்கள் நடத்திய இந்த யாகத்துக்கும் அந்த சக்தியில்லையே..”

வாயடைத்து நின்றான் மன்னவன் !!

oOo   oOo

மேகனா !!

சார்லெட்டில் என் மகள் படிக்கும் பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் படிக்கும் 6 வயது மாணவி.. என் வீட்டுக்கு அடிக்கடை வரும் குழந்தை.. பெற்றோர் ஆந்திராவிலிருந்து வந்து இங்கு சில வருடங்களாக சார்லெட்டில் இருக்கும் என் குடும்ப நண்பர்.

மேக்னாவிடம்.. நம் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி பற்றியும் நாம் கட்டடம் கட்டும் திட்டம் பற்றியும் அதற்கு ஒரு சதுர அடிக்கு $35/- செலவாவது பற்றியும் பேசுவதுண்டு..

”உன் பிறந்த நாளைக்கு அப்பாவிடம் கேட்டு என் பள்ளிக்கு ஒரு சதுர அடி டொனேஷன் வாங்கித்தரமுடியுமா?” என்று கேட்டதுண்டு..

சமீபத்தில் மேகனாவின் ஏழாவது பிறந்த நாள்.... அவள் அப்பாவிடம் பேசுகிறாள் !!

“Daddy.. what are you going to do for my Birthday ?"

"Whatever, you want.. I can take you to a place of your choice..or buy a gift or arrange a party for your friends...what do you want.."

"I DONT WANT ANY OF THAT.... Give me the money you can spend.. I want to donate it to Vasan Uncle's school project.."

பிறந்த நாள் அன்று .. என்னை ஸ்பெஷலாக அவர்கள் வீட்டுக்கு அழைத்து ஒரு கவரில் $70 பணம் வைத்து அதனுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து “Vasan Uncle Take it.. Its for your school.." என்று தந்த அந்தக் குழந்தை என் எதிரில் தேவதையாகத் தெரிந்தாள்...

ஒரு ஏழு வயது பெண்ணுக்கு தன் பிறந்தநாள் பற்றி எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் என்பது எனக்குப் புரியும்... மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான நான்.. அவர்களின் நட்பு வட்டங்கள் தங்கள் பிறந்த நாட்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும்..

எல்லாவற்றையும் மறுதளித்துவிட்டு...”Vasan Uncle .. Take it.." என்று சொன்ன அந்தக் குழந்தையைக் கட்டியணைத்து வாழ்த்தினேன்..

உடனே.. கடைக்குச் சென்று.. 10 டாலருக்கு ஒரு கேக் வாங்கிவந்து அவளுக்கு அளித்தேன்..

”Why did you spend that money for cake, Uncle? I would have added that to my donation to your school..."

"அம்மா .. தாயே.. உன் மனசு மிக மிகப் பெரியது.. ஏழு வயசுக்கு நீ செய்வது...மிகப் பெரிய தியாகம் தான்...உனக்கு எல்லா நலனும் இறைவன் அருள்வான்..” என்று வாழ்த்தி விடைபெற்றேன்...

அன்றைய தினம் சென்ற கதையில் பார்த்த மரநாய்... மேக்னா வீட்டுக்கு வந்திருந்தால்.. அதன் முழு உடலும் தங்கமாக மாறியிருக்கும்...

இன்றைய நம் எல்லா தேவைகளும் முடிந்த பின்னர்.. நம் எதிர்காலத்துக்கு நாம் தேவையென நினைப்பதெல்லாம் சேர்த்த பின்னர்.. மீதியிருப்பதைத் தருவது பெரிய்ய தர்மமில்லை...

இன்றைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டு அதற்குண்டான செலவை நல்ல காரியங்களுக்குத் தருவது மிகப் பெரிய தியாகம்..

ஏழு வயது மேகனாவுக்கு வந்த இந்த தெளிவு.. நம் எல்லோருக்கும் வரும் நாள் .. பொன்னாள்...








Saturday, July 2, 2011

28. எங்கள் முன்னாள் மாணவர் கணேசனுக்கு நன்றி !!

எங்க ஸ்கூல் மாணவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதல் கட்டத்தில் எனக்கு அறிமுகமானவர் கணேசன் தான். அவரிடம் நான் பேசியது 2003 ல்.

எங்க ஸ்கூலில் 1974 முதல் 1978 வரை 8, 9, 10, 11 ம் வகுப்புகளில் (அந்தக் கால old SSLC) படித்துத் தேறி இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் பெரிய பதவியில் இருப்பவர்.

நான் 2003 ல் பேசியபோது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்கு ஆதர்சமான ஆசிரியர் எஸ். கே அன்று அன்புடன் அறியப்பட்ட திரு எஸ். கிருஷ்ணமுர்த்தி என்ற கணித ஆசிரியர்.

“நானெல்லாம் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் சார்.. என் கிட்டே புத்தகம் நோட்டு வாங்க எல்லாம் அப்ப காசு கிடையாது சார்.. நான் நல்லாப் படிக்கிறதைப் பார்த்துட்டு எஸ். கே சார் தான் எனக்கு அகோர சாஸ்திரிகள் அற நிலைய ட்ரஸ்டுல சொல்லி எனக்கு பாடப் புத்தகங்களெல்லாம் இலவசமாக வாங்கிக் கொடுத்து என்னைக் கரை சேர்த்தவர்.. அவர் ஃபோன் நம்பர் உங்ககிட்டே இருக்கா? அவர்னா எனக்கு ரொம்ப உசிர் சார்” என்று உருகினார்.

எஸ்கே அவர்கள் அப்பொழுது தனது ஆசிரியப் பணியை முடித்து ஓய்வு பெற்று சென்னையில் தன் மகனுடன் செட்டிலாயிருந்தார்.. அவரது தொலைபேசி எண்ணையும் வீட்டு முகவரியையும் வாங்கி கணேசனிடம் கொடுத்தேன்..

“அடுத்த வருஷம் நான் வகேஷனுக்குப் போகும் போது அவசியம் எஸ்.கே சாரைப் பார்த்து நன்றி சொல்லப் போறேன்” என்று ஆனந்தமாக கண்ணீருடன் வாங்கிக்கொண்டார்.

அவரது துரதிருஷ்டம, கணேசன் லீவுக்கு சென்னை செல்வதற்கு முன் அக்டோபர் 2004ல் எங்கள் அன்புக்குரிய ஆசிரியர் காலமாகிவிட்டார்.

பள்ளியின் கட்டிட ப்ராஜெக்ட் ஆரம்பித்த போது நவம்பர் 2009ல் நான் மீண்டும் பேசியது கணேசனிடம் தான்.. கணேசன் ஸ்கூலுக்கு ஏதாவது பண் உதவி முடிந்தால் செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். அன்று மட்டும் என்னிடம் அவர் எஸ்.கே சாரைப் பற்றியும் அவர் தனக்குச் செய்த உதவிகளையும் பற்றி 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்..

“அப்ப ஸ்கூலுக்கு ஒரு க்ளாஸ் ரூம் கட்டிக் கொடுத்து விடுங்கள் .. க்ளாஸுக்கு எஸ். கே சார் பேரை வைத்து விடுவோம். சாரோட பொண்ணு துர்கா சென்னையில் தானிருக்கிறார். அவரை வரவழைத்து வகுப்பறையைத் திறந்து வைத்து விடுகிறேன் “ என்றேன்.

“எவ்வளவு சார் ஆகும்? “ என்றார் கணேசன்.

“ஒரு வகுப்பறை எப்படியும் 500 சதுர அடி கட்ட வேண்டியிருக்கும்.. 5 லட்ச ரூபாய் ஆகுமே” என்றேன்.

அடுத்த வினாடி..”எப்போ சார் வேணும்.. கொடுத்துடறேன்” என்று வாக்கு கணேசனிட்மிருந்து வந்தது.

“இப்பத்தான் நாங்க திட்ட வேலைகள் ஆரம்பித்திருக்கிறோம்.. தேவைப் படும் போது தொடர்பு கொள்கிறேன்.. நன்றி..” என்று சொல்லி முடித்தேன்..

சென்ற வாரம் அவரைத் தொடர்பு கொண்டு பள்ளிக்காகத் தொடங்கிய வங்கிப் பதிவு எண்ணைச் சொன்னேன்..

இன்று கணேசனிடமிருந்து செய்தி..

“ஒரு லட்ச ரூபாய் நம்ம ஸ்கூல் அக்கவுண்டுக்கு அனுப்பியிருக்கிறேன்... வந்து விட்டதா என்று சொல்லுங்கள்.. அது வந்த வுடன் அடுத்த வாரம் மீதம் 4 லட்ச் ரூபாய் அனுப்பி வைக்கிறேன்” என்று.

எங்கள் பள்ளி மாணவர்களின் குருபக்திக்கு மாணவர் கணேசன் முத்துகிருஷ்ணன் ஒரு பெரிய சான்று..

கணேசனுக்கும் அவர் தம் குருபக்திக்கும் எனது பெரிய வந்தனங்கள் !!

தான் மறைந்த பின்னும் தனது மாணவர்கள் மனதில் இடம் பிடித்த எனது அன்புக்குரிய ஆசிரியர் (இவர் எனக்கும் கணித ஆசிரியர்.. அவரிடம் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் நான் கணிதமும் ஆங்கிலமும் படித்திருக்கிறேன்) திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அவரது குடும்பத்தினர் பல்லாண்டு வாழ அன்புடன் பிரார்த்திக்கிறேன்..